Sunday, November 2, 2008

சேலம்-கரூர் இருப்புப்பாதைத் திட்டம் அடுத்த நூற்றாண்டிலாவது முடியுமா?

சேலம் ‍‍‍ கரூர் இருப்புப்பாதைத் திட்டம் 1996-97ம் ஆண்டுகளுக்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சேலம்‍-நாமக்கல்-கரூர் நகரங்களை இணைப்பதாகும். தற்சமயம் முக்கிய மாவட்டத்தலைநகரமான நாமக்கல் நகரத்தில் தொடர்வண்டிநிலையமோ இருப்புப் பாதையோ இல்லை.

இத்திட்டத்துக்கான அடிக்கல் அப்போதைய மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சர் நிதிஷ்குமார் அவர்களால் 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் திகதி நாட்டப்பட்டது.

இந்த இருப்புப்பாதையின் மொத்த தூரம் 85 கிமீ. இதனால சேலம், மல்லூர், ராசிபுரம், நாமக்கல், மோகனூர், கரூர் ஆகிய நகரங்கள் இணைக்கப்படும். திட்டத்துக்கான மொத்த செலவு 136 கோடி இந்திய ரூபாய்கள் ஆகும். இதில் முக்கியமாக காவேரி ஆற்றின் குறுக்கில் மோகனூரையும் வாங்க‌ல் ஊரையும் இணைக்கும் வகையில் ஒரு பாலம் கட்ட வேண்டும்.

தற்சமயம் தென்மாவட்டங்களிலிருந்து வரும் புகைவண்டிகள் சேலம் செல்வதற்கு கரூரிலிருந்து ஈரோடு சென்று அங்கிருந்து சேலம் செல்லவேண்டும். இதனால் கூடுதலாக 45கிமீ தூரமும் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கூடுதலாகவும் ஆகும்.

சரி இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டதே இந்தத் திட்டம் முடிந்து புகைவண்டிகள் ஓட ஆரம்பித்துவிட்டதா என்றால் இன்னும் இல்லை. :(. காரணம் கூறுகெட்ட அரசாங்கம் செய்த ஒரு செயல் தான்.
இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிலங்கள் ‍ பெரும்பாலும் விவசாயிகள் ‍ இடமிருந்து கையகப்படுத்தும் போது அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்க முன்வந்த தொகை-அதிகமில்லை ஜென்டில்மென்-ஒரு சதுராடிக்கு 0.63 பைசா. (இவனுங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?)

காவேரி ஆற்றுப் படுகையில் அமைந்திருக்கும் வளம் கொழிக்கும் நிலங்களை இப்படிக் கேவலமான் முறையில் விவசாயிகளிடமிருந்து பெற்று விடலாம் என எண்ணியிருந்த நேரத்தில் இதை எதிர்த்துப் பலரும் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்ததால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நாமக்கல் நீதிமன்றம் ஒரு சதுர அடி ரூ211 என்ற விலையில் அரசாங்கம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது. இருப்பினும் மேலும் சில வழக்குகளை விவசாயிகள் தொடர்ந்ததால் இத்திட்டம் காலவரையற்று ஒத்தி வைக்கப்பட்டு பல வருடங்களாக தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் ஏதும் நிதி ஒதுக்கப்படவில்லை.

கடந்த வருடம் நிதி ஒதுக்கப்பட்டு மத்திய இணை அமைச்சர் வேலு தெரிவிக்கையில் சுமுகமான முறையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஒரு சில அதிகாரிகளஇன் பொறுப்பற்றதனத்தால் தேவையில்லாத வழக்குகள் போடப்பட்டு திட்டம் தாமதமானதுடன் இன்னும் செயல்படுத்தப்படவும் இல்லை என்பதுதான் வருந்தத்தக்கது.

நாமக்கல், மோகனூர் சுற்றுவட்டார நண்பர்கள் வருத்தத்துடன் இத்தகைய தகவ்ல்களைத் தெரிவித்ததால் இதை எழுதும் எண்ணம் ஏற்பட்டது.

0 Comments: